ஆழ்துளைக்கிணறுக்குள் விழுந்த குழந்தை உயிருடன் மீட்பு!
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் திறந்துகிடந்த ஆழ்துளைக் கிணறுக்குள், தவறி விழுந்த 2 வயது ஆண்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் உம்மாடிவரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஆண் குழந்தை சந்திரசேகர் (வயது 2). இவன் வீட்டின் அருகே, நேற்று மதியம் 3 மணியளவில் விளையாடிக் கொண்டிருக்கையில் செயல்படாத நிலையில் திறந்துகிடந்த ஆழ்துளைக்கிணறுக்குள் தவறுதலாக விழுந்துள்ளான். இதனை முதலில் கவனிக்காத இவனது தாயார், அழுகுரல் கேட்டு சென்று பார்த்துள்ளார். உள்ளே 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து உதவிக்காக அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளைக்கிணறுக்கு நேர் பக்கவாட்டில் குழுதோண்டி குழந்தையை மீட்டுள்ளனர். மேலும், சிக்கியிருந்த குழந்தைக்கு ஆக்ஸிஜன் குழாய்கள் வழியாக பிராணவாயு செலுத்தப்பட்டுள்ளது.
11 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தை சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தை மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்