நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து, டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள வரும் உலகத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டுத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருந்தளிக்க உள்ளார்.
இதன் முன்னோட்டமாக ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையின் ராஷ்ட்ரபதி சார்பில் இரவு விருந்துக்கு கொடுக்கப்பட்ட அழைப்பிதழ்களில் இந்திய ஜனாதிபதி (President Of India) என்பதற்குப் பதிலாகப் பாரதத்தின் ஜனாதிபதி (President Of Bharat) என இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்தது என்று கூறி, அசாம் முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அதில் அவர், “பாரதம் மற்றும் இந்தியா பெயர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தேவையற்ற அரசியல் நடவடிக்கைகளை உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து இது குறித்து பரிசீலிக்க வேண்டும். நாட்டின் பெயரில் உருவாகும் அனைத்து அமைப்புகள், கட்சிகள் மற்றும் கூட்டணிகளைத் தடை செய்ய வேண்டும். எங்கள் கட்சி எந்தவித சாதிய, வகுப்புவாத மற்றும் முதலாளித்துவ கூட்டணிகளில் இருந்து விலகி இருப்பது முற்றிலும் சரியானது” என்று கூறினார்.