Skip to main content

தமிழக விவசாயிகளும் எங்கள் சகோதரர்கள்தான்! - தேவகவுடா பளீச்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

தமிழக விவசாயிகளும் தங்களுக்கு சகோதரர்கள்தான் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 
 

deveGowda

 

 

 


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கபினி மற்றும் கே.எஸ்.ஆர். அணைகளிலும் காவிரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இருப்பினும் தமிழகத்திற்குத் தேவையான நீரை பங்கிட்டுக் கொடுப்பதில் தாமதமே நீடிக்கிறது.
 

 

 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கோவில் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த முன்னாள் பிரதமரும், தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை இரு மாநில முதல்வர்களும் கலந்துபேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
 

மேலும் பேசிய அவர், ‘தமிழகத்தில் இருக்கும் விவசாயிகளும் எங்களுக்கு சகோதரர்களைப் போன்றவர்கள்தான். இங்குள்ளவர்கள் அணையின் நீர்மட்டத்தை எப்போது வேண்டுமானாலும் பார்வையிட வரலாம். சில நாட்களாக கர்நாடகத்தில் மழை கொட்டித்தீர்ப்பதால், தமிழகத்திற்கு வழங்கவேண்டிய பங்கைவிட இரண்டு மடங்கு தண்ணீர் காவிரியில் ஓடுகிறது’ எனவும் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.