காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தகவலறியும் உரிமை சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த மசோதா நிறைவேறியுள்ளது.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா விரைவில் மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, இந்த சட்ட திருத்தத்தின்படி தலைமை தகவல் ஆணையர் மற்றும் அதிகாரிகளின் பதவி காலங்களை மத்திய அரசு தனது இஷ்டப்படி மாற்றிக்கொள்ள முடியும். தற்போது உள்ள சட்டத்தின்படி தலைமை தகவல் ஆணையரின் பதவி காலம் 5 ஆண்டுகள். ஆனால் தற்போது இந்த சட்ட திருத்தத்தின்படி, ஒரு ஆணையரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம், அதே போல பதவி நீட்டிப்பு செய்யலாம். அதுமட்டுமல்லாமல் ஆணையரை நேரடியாக மத்திய அரசு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் நிலையும் ஏற்படும்.
தற்போது உள்ள நடைமுறைப்படி ஒரு மத்திய மந்திரி, எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை உடைய கட்சியின் தலைவர் என மூன்று நபர்களின் ஆலோசனையின் பேரில் ஆணையர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால் இந்த திருத்தத்தின்படி இனி மத்திய அரசே தன்னிச்சையாக ஆணையரை தேர்வு செய்யும் நிலை ஏற்படும். மேலும் தகவல் ஆணையர் உட்பட அதிகாரிகளின் சம்பளமும் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இவை அனைத்தையும் காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வருகின்றன.