ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்திற்காக 20,000 விவசாயிகள் தலைநகரில் திரள திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 2,500 டிராக்டர்களில் ஊர்வலமாக டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.
நாளை மறுநாள் டெல்லியில் இந்த பேரணி போராட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே 2020-ல் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் போது ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கங்கள் இந்தப் போராட்ட முடிவை எடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைக்கு தீர்வு காண்பது தொடர்பாக நாளைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்க நிர்வாகிகளுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த போராட்டம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. டிராக்டர் பேரணி போலீசார் தடுத்ததால் கார், பேருந்து, ரயில்களில் சென்று போராட்டம் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டெல்லியின் எல்லைகளில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை ஹரியான அரசு மேற்கொண்டுள்ளது. நாளை மறுநாள் டிராக்டர் பேரணி என்பதால் ஹரியானாவில் டீசல் விற்பனையில் புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிக்கு டிராக்டர் ஒன்றுக்கு பத்து லிட்டர் டீசலுக்கு மேல் வழங்கக் கூடாது என ஹரியானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஹரியானாவில் இன்று காலை ஆறு மணி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 11:59 வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க சாலைகளில் இரும்பு கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.