
ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், தனது ப்ரிபெய்டு கட்டணங்களை உயர்த்துவதாக நேற்று (22.11.2021) அறிவித்தது. மேலும், இந்தப் புதிய கட்டண உயர்வு வரும் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஏர்டெல்லை பின்பற்றி மற்ற நிறுவனங்களும் விலையேற்றம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், ஏர்டெல்லை போலவே வோடஃபோன் - ஐடியா நிறுவனமும், தனது ப்ரிபெய்டு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த கட்டண உயர்வு நவம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தக் கட்டண உயர்வு, ஒரு பயனரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாயை அதிகரிக்கும் செயல்முறையைத் தொடங்கிவைக்கும் என்றும், தொலைத்தொடர்புத்துறை எதிர்கொள்ளும் நிதிநெருக்கடியை நிவர்தி செய்ய உதவும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
