அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் 23 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 9.3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது. அம்மாநிலத்தின் 23 மாவட்டங்களில் சுமார் 9.3 லட்சம் மக்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த ஆண்டு வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் சுமார் 1.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கவுஹாத்தி, நிமதிகாட், தேஸ்பூர் சோனித்பூர், கோல்பாரா மற்றும் துப்ரி நகரங்களில் பிரம்மபுத்ரா நதியில் பாதுகாப்பு அளவை கடந்து நீர் பாய்வதால், மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றையும் இழந்து தவித்து வருகின்றனர். வெள்ள நிலைமை குறித்து டின்சுகியாவின் குய்ஜன் பகுதி கிராம மக்கள் தெரிவிக்கையில், "பல வீடுகள் வெள்ளநீரில் அடித்துச்செல்லப்பட்டது. நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களுக்கு உணவு இல்லை. எங்களுக்கு உதவ அரசங்கத்திலிருந்து யாரும் இங்கு வரவில்லை" எனத் தெரிவிக்கின்றனர்.