நிதி ஆயோக் கூட்டம் மற்றும் பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஆகியவற்றிற்காக இன்று டெல்லி சென்றிருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்காக பிரசாந்த் கிஷோரை பணியமர்த்த வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்து இரண்டு மக்களவை தேர்தலுக்கு பாஜக வின் வெற்றிக்கும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றிக்கும், தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகனின் வெற்றிக்கும் மிகப்பெரிய பிரம்மாஸ்திரமாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இணைந்து பணியாற்றும் கட்சிகள் பெரும்பாலும் தேர்தலில் வெற்றியையே சந்தித்துள்ளதால் இவரின் அரசியல் திட்டமிடலுக்கு அரசியல் கட்சிகள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் மேற்குவங்க முதல்வர் மம்தா பிரசாந்த் கிஷோரை சந்தித்த நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமியும் அவரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பில் அடுத்த சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை வெற்றிபெற வைப்பதற்கான திட்டங்கள் குறித்து பேசப்படலாம் என கணிக்கப்படுகிறது.