
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கக்கூடிய ரோகிணி சிந்தூரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவிற்கும் இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா சமூக வலைதளத்தில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுவே உச்சகட்ட மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு கர்நாடக தலைமைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இவர் சிறை துறையில் டிஐஜியாக இருந்தார். சசிகலா சிறையில் இருந்த ஆரம்பக் காலத்தில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக சிறைத்துறை டிஜிபி மீது பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டு தற்போது கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானவர் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. இவர் தற்போது கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறையில் ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கிடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல்கள், சண்டைகள் நடந்து வந்தன. இந்நிலையில், ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ரூபா பதிவிட்டுள்ளார். அதில் இந்த படங்களை மூன்று ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது ரோகிணி ஷேர் செய்துள்ளார். ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகளின்படி இது குற்றத்திற்கு உரியது எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பான ரோகிணி சிந்தூரி 'மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சனை; பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும்' எனத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், டிபி புகைப்படங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக்கொண்டு ரூபா வதந்திகளைக் கிளப்பி வருவதாக கொதித்துள்ளார் ரோகிணி. இந்த விவகாரம் அதிகாரிகள் மட்டத்தில் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பெண் அதிகாரிகளான ரூபா, ரோகிணி ஆகியோருக்கு கர்நாடக தலைமைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடாது என்று கர்நாடக தலைமைச் செயலாளர் மூலம் இவர்கள் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூரில் சக பெண் அதிகாரி ஷில்பா நாக் என்பவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ரோகிணி ஐஏஎஸ் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதன் பிறகு ரூபா ஐபிஎஸ் உடன் ஏற்பட்ட மோதலில் மீண்டும் மாற்றப்பட்டிருந்தார் ரோகிணி. இந்நிலையில் ரூபா, ரோகிணி ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கர்நாடக தலைமைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.