மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கரோனா காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கியதில் இருந்து கடுமையான அமளி நிலவியது. இதனைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகரின் அறைக்குச் சென்ற பாஜக உறுப்பினர்கள் சபாநாயகரைத் தவறான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ், "எதிர்க்கட்சி தலைவர்கள் எனது அறைக்கு வந்து தேவேந்திர ஃபட்நாவிஸ் மற்றும் மூத்த தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். சில தலைவர்கள் என்னை இழுத்தனர்"எனக் கூறியுள்ளார்.
இதனையடுத்து 12 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவருடத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தீர்மானம் சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சரால் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்நாவிஸ், தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, இது சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறியுள்ளார்.