மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், மகாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அச்சல்பூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கார்கேவையும் விமர்சனம் செய்தார்.
அந்த பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “நான் ஒரு யோகி, என்னைப் பொறுத்தவரை, தேசம் முதன்மையானது. ஆனால், மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சமாதான அரசியலே முதன்மையானது. கார்கே ஜி, என் மீது கோபப்படாதீர்கள். உங்களுக்கு கோபம் வர வேண்டுமானால், ஹைதராபாத் நிஜாம் மீது கோபம் கொள்ளுங்கள். ஹைதராபாத் நிஜாமின் ரசாகர்கள் உங்கள் கிராமத்தை எரித்தனர், இந்துக்களை கொடூரமாக கொன்றனர், உங்கள் மரியாதைக்குரிய தாய், சகோதரி, உங்கள் குடும்ப உறுப்பினர்களை எரித்தனர். எப்பொழுது பிரிந்தாலும் அதே மிருகத்தனமான மண்ணில் பிளவுபடுவார்கள் என்ற உண்மையை இந்த நாட்டின் முன் முன்வையுங்கள்.
கார்கே இந்த உண்மையை ஒப்புக் கொள்ளத் தயங்குகிறார். இது முஸ்லீம் வாக்காளர்களுக்கு அவர் அளித்த வேண்டுகோளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறார். மகா விகாஸ் அகாடி கூட்டணி, மகாராஷ்டிராவை ‘லவ் ஜிஹாத்’ மையமாக மாற்றியுள்ளது. அந்த கூட்டணி தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் கூட்டணி” என்று கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் சார்பாக நேற்று நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “யோகி ஒருபோதும், ‘பிரிந்தால் அழிந்துவிடுவோம்’ போன்ற கருத்துக்களை வெளியிட மாட்டார். பல தலைவர்கள் ‘கெருவா’ அங்கிகளை அணிந்துகொண்டு தலை மொட்டையடித்துள்ளனர், சிலர் முதல்வர்களாகவும் ஆகின்றனர். நீங்கள் சன்னியாசியாக இருந்தால் ‘கெருவா’ அணிந்து அரசியலில் இருந்து விலகி இருங்கள்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.