கேரள மாநிலம், திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவருடைய கணவர் பியூஸ் பால். இந்நிலையில், பிரியா தனது நீண்ட நாள் கனவான ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டத்தை பெறுவதற்காக, இருஞ்சாலக்குடா பகுதியில் உள்ள கிறிஸ்து கல்லூரியில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக படித்து வந்தார். அவரது ஆய்வு 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை நீடித்தது.
இதனையடுத்து, பிரியா தனது ஆய்வறிக்கையை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். அவர் அளித்த ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, பிரியா முனைவர் பட்டம் பெற தகுதியானார்.
இந்த சூழ்நிலையில், கர்ப்பமாக இருந்த பிரியா பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, பெண் குழந்தையை பெற்றெடுத்து பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அவர் முனைவர் பட்டத்தை பெற முடியாமல் போனது. இதையடுத்து, டாக்டட் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்ட நாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை அவருடைய மகளிடம் வழங்க வேண்டும் என பிரியாவின் குடும்பத்தினர் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்கள் அளித்து வந்த கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, பிரியாவின் டாக்டர் பட்டத்தை, யூ.கே.ஜி படித்துவரும் அவரது மகள் ஆண்ட்ரியா பெற இருக்கிறார். தாயின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் விதமாக யூ.கே.ஜி படிக்கும் குழந்தைக்கு டாக்டர் வழங்க ஒப்புதல் அளித்த பல்கலைக்கழகத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.