பிஎம் கேர்ஸ் நிதியை ஏன் இன்னும் எந்த திட்டத்திற்கும் செலவு செய்யவில்லை எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா தடுப்புக்கு நிதி திரட்டும் நோக்கில் பிரதமர் மோடி, PM Cares என்ற சிறப்புக் கணக்கை அண்மையில் தொடங்கினார். ஏற்கனவே பிரதமரின் நிவாரண நிதி கணக்கு இருக்கும்போது, இந்த புதிய கணக்கு எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகிய பாஜக அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கணக்கை சி.ஏ.ஜி அமைப்பால் தணிக்கை செய்யமுடியாது எனக் கூறப்பட்டதால் இந்த சர்ச்சை பூதாகரமானது.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, "பிரதமர் நிவாரண நிதி என இருக்கும்போது ஏன் பிஎம் கேர்ஸ் நிதி தனியாக உருவாக்கப்பட்டது. கரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில்தான் பிஎம் கேர்ஸ் நிதி உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த நிதியை கரோனா நோயாளிகளுக்கு ஏன் செலவிடவில்லை. பிஎம் கேர்ஸ் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை சி.ஏ.ஜி அலுவலகம் அல்லது சுயாட்சி பெற்ற நம்பகத்தன்மை உள்ள நிறுவனம் தணிக்கை செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த PM Cares கணக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.