பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 20 ஆம் தேதி ஓரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களைவிடவும் குறைவான வாக்கு சதவீதமே பதிவாகியுள்ளது. 2007 ஆம் ஆண்டு தேர்தலில் 75.4 சதவீத வாக்குகளும், 2012-ல் 78.3 சதவீத வாக்குகளும், 2017-ல் 77.4 சதவீத வாக்குகளும் பதிவான நிலையில், தற்போது 71.95 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
இந்த குறைவான வாக்குப்பதிவு சதவீதம் யாருக்கு சாதகம் என ஒரு பக்கம் பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பஞ்சாப் மாநிலத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளது.
பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மியிடையே ஆட்சி அமைப்பதில் கடும் போட்டி நிலவும் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.