டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதோடு, தேர்தல் பணிகளிலும் இறங்கியுள்ளன. டெல்லியில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரச்சார களங்களும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இந்த சூழலில் டெல்லி தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மீ வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பணியின் போது துப்புரவு தொழிலாளி இறந்தால், குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லி மாநிலத்தின் துப்புரவு தொழிலாளிகள் யாராவது தங்களது பணி காலத்தின் போது இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி நகரத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.