பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தச்சூழலில், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பிற்கான முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இரண்டுமுறை எம்.பியான பகவந்த் மானை அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளார். பஞ்சாபின் முதல்வர் வேட்பாளரை வாட்ஸ்அப் மூலமும், தொலைபேசி அழைப்பு விடுத்தும் மக்களே தேர்வு செய்யலாம் என ஆம் ஆத்மி அறிவித்திருந்த நிலையில், முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்ய 21 லட்சம் பேர் வாக்களித்ததாக ஆம் ஆத்மி கூறிய நிலையில், வாக்களித்தவர்களில் 93 சதவீதம் பேர் பகவந்த் மானை முதல்வர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பகவந்த் மான், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.