Skip to main content

சிவசேனா விவகாரம்: “ஆளுநர் எடுத்த முடிவு தவறு” - உச்சநீதிமன்றம்

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

maharashtra sivecena political crisis supreme court related judgement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

 

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார்.

 

இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும், இந்த வழக்கு அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் சார்ந்தது என்பதால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ்.நரசிம்ஹா, கிருஷ்ணா முராரி, எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய 5 பேர்  கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று (11 ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

maharashtra sivecena political crisis supreme court related judgement

 

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், "உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்ததால் அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது. அப்போது ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரே அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது என்பது தவறான முடிவாகும். மேலும், அவர் இந்த முடிவை எடுத்ததற்காக உரிய காரணத்தைக் கூறவில்லை. இருப்பினும், உத்தவ் தாக்கரே பதவி விலகிய பின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் கிடையாது.

 

ஏக்நாத் ஷிண்டே அணியினர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியினராக இல்லாமல் ஒரு அணியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போதைய சட்டமன்ற சபாநாயகர் ராகுல் நாவேகர் அவர்கள் அணியினர் சார்பாக சட்டமன்றத்திற்கு பகத் கோகவலே என்பவரை புதிய கொறடாவாக நியமித்தது சட்ட விரோதமானது. மேலும், தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்ளும் சட்டமன்ற சபாநாயகர் ஒருவர் எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. அதனால், இந்த வழக்கினை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுகிறோம்” எனத் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்