
ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டம் அருகே சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததது. இந்தப் பேருந்தில் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரை செல்வதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று நூஹ் மாவட்டம் அருகே பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பேருந்து திடீரென்று தீ பற்றி எரிந்தது. பேருந்தில் தீ பற்றி எரிந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். மேலும், 9 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பயணிகளை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த பயணிகளை சிகிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.