உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிவந்த விக்ரம் ஜோஷி என்பவர் காசியாபாத்தில் கடந்த 20 ஆம் தேதி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டார். விக்ரம் ஜோஷி கடந்த 20 ஆம் தேதி தனது மகள்களுடன் விஜய் நகரிலுள்ள அவரது வீட்டிற்கு பைக்கில் செல்லும்போது இந்தத் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட விக்ரம் ஜோஷி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் நரம்புகளில் மிகவும் மோசமான சேதம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
இச்சம்பவம், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் தேதி விக்ரம் ஜோஷியின் மருமகளைச் சிலர் கிண்டல் செய்ததாகவும், அதனையடுத்து விக்ரம் ஜோஷி காவல் நிலையத்தில் புகார் அளித்தாகவும், அதன் தொடர்ச்சியாகவே, இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் இந்தக் கொலையில் ஈடுபட்ட ரவி மற்றும் சோட்டு ஆகிய இருவரை போலீஸார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.