மஹாராஷ்ட்ராவில் பெண் போலீசாருக்குப் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதால் பெண் போலீசார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பெண் போலீசார் காவல் நிலையங்களில் பணியாற்றிவருகிறார்கள். ஆண்களைப் போலவே இவர்களுக்கும் 12 மணி நேர பணி நேரம் ஒதுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காவல்துறையினருக்கும் 3 வேளை ஷிஃப்ட் முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துவருகிறது. சில மாநிலங்கள் அதைப் பரிசீலனை செய்துவரும் நிலையில், மஹாராஷ்ட்ரா மாநில அரசு தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி பெண் போலீசாருக்கு எட்டு மணி நேர பணி நேரம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில காவல்துறை இயக்குநர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பை பெண் போலீசார் வரவேற்றுள்ளனர். மேலும், ஆண் போலீசார் உட்பட அனைவருக்கும் எட்டு மணி நேர பணி நேரமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. மற்ற மாநிலங்களும் மஹாராஷ்ட்ராவின் நடைமுறையைப் பின்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.