ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் கைது விவகாரம் தொடர்பான வழக்கில் விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணி நேரமாக இரு தரப்பு வாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து தீர்ப்பும் வழங்கப்பட்டது. தீர்ப்பில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தது நீதிமன்றம். இந்த உத்தரவைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவை ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்ல போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.