ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் (ஜனவரி 25) மாலை நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ஆற்றும் உரையுடன் குடியரசு தின விழாவானது தொடங்கும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 26 ஆம் நாள் காலை குடியரசுத் தலைவர் டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். இவ்விழாவின் ஒரு பகுதியாக நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகள், முப்படைகளின் வாகன அணிவகுப்பு, விமானப்படையின் சாகசங்கள் மற்றும் ராணுவ பலத்தை பறைசாற்றும் பாதுகாப்பு வீரர்கள் அணிவகுப்புகள் ஆகியவை நடைபெறும். இதில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வர்.
அந்த வகையில் நாட்டின் 75வது குடியரசு தின விழா (ஜனவரி 26) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுமார் 14 கட்டங்களாக வகுக்கப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. செங்கோட்டை, கர்த்தவியா பாதை, விஜய் சவுக், திலக் மார்க் உள்ளிட்ட இடங்களில் சுமார் 14 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவிற்கு வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு பெண்களை மையமாக வைத்து, இந்திய இசைக்கருவிகளுடன் 100 பெண் கலைஞர் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் அணியினரும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். குடியரசு தின விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 75 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.