திருமணமான பெண்ணை, 71 ஆடுகளை பெற்றுக்கொண்டு காதலனுடன் அனுப்பி வைக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து ஒன்று கணவனுக்கு உத்தரவிட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ளி பிப்ரியாச் கிராமத்தில் உள்ள இளம் பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் வேறொரு நபரை காதலித்து வந்த நிலையில், தனது கணவனின் வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார். மனைவியைக் காணாமல் தேடிய கணவர், தனது மனைவி மற்றொருவருடன் வாழ்வதை கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரம் கிராமப் பஞ்சாயத்துக்கு சென்றது. பஞ்சாயத்தில் விசாரணை நடைபெற்ற போது, அந்த பெண் தனது கணவருடன் வாழ விருப்பமில்லை, கட்டாயப்படுத்தி இந்த திருமணத்தை செய்து வைத்தனர். தனது காதலருடன்தான் வாழ்வேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கு அந்த பெண்ணின் கணவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து அந்த பெண்ணின் காதலரிடம் 71 ஆடுகளை அந்த பெண்ணுக்கு ஈடாக அவரின் கணவருக்கு வழங்கிவிட்டு, பெண்ணுடன் வாழ்க்கையைத் தொடரலாம், அல்லது ஆடுகள் வழங்க முடியாவிட்டால், அந்த பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழ விட வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர்கள் தீர்ப்பளித்தனர்.
அதன்படி அந்த பெண்ணின் காதலர் தன்னிடம் இருந்த 71 ஆடுகளை அந்த பெண்ணின் கணவருக்கு கொடுத்துவிட்டு அந்த பெண்ணை அழைத்து வந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அப்பெண்ணின் காதலனின் தந்தைக்கு இந்த முடிவு பிடிக்காததால், தான் வீட்டில் வைத்திருந்த ஆடுகளை, அந்த பெண்ணின் கணவர் கடத்திச் சென்றுவிட்டதாக காதலரின் தந்தை புகாரில் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண்ணுக்கு விலையாக 71 ஆடுகளை நிர்ணயித்த இந்த சம்பவம் பலரது மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.