புகைப்பிடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, புகைப்பழக்கத்தை கணிசமாக குறைத்திருந்தாலும் கூட இந்தியாவில் இன்னமும் அது பரவலாகவே இருந்து அச்சமூட்டுகிறது. இது ஒருபுறம் இருக்க, 10 - 14 வயதுக்குட்பட்ட 6.25 லட்சம் குழந்தைகள் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதாக குளோபல் டொபாக்கோ அட்லஸ் தகவல் வெளியிட்டு அதிர்ச்சியூட்டுகிறது.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் புகைப்பழக்கத்தினால் 9,32,600 இந்தியர்கள் பலியாவதாகவும், வாரமொன்றுக்கு 17,887 பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள் என்றும் இந்த டொபாக்கோ அட்லஸ் தகவலைத் தயாரித்த அமெரிக்க புற்றுநோய் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவை மையமாகக் கொண்ட வைடல் ஸ்ட்ரேடஜீஸ் அமைப்பும் தெரிவிக்கின்றன.
அதேபோல், நாளொன்றுக்கு 103 மில்லியன் 15 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிப்பதால் ஆகும் செலவு ரூ.1,818,691 மில்லியன் என்று அந்தத் தகவல் கூறுகிறது. இதன்மூலம், நேரடி மற்றும் மறைமுகக் காரணங்களால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.
இங்கு எந்தக் காரணத்திற்காக புகைப்பிடிக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லாமல் காலப்போக்கில் செத்து மடிகின்றனர் பலர். இந்த அவலம் என்று தீரும் என்றே சோகமுகம் காட்டுகிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.