தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 63 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 42 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் பாஜக 154 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 72 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 106 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும், மற்றவை 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 45 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
5 மாநில தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இல்லையா என்பது தொடர்பான கருத்துக்கள் எழுந்து வருகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை மல்லிகார்ஜுன கார்கே கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் எனவும் கூறப்படுகிறது.