Skip to main content

‘அந்த காட்சி ஆழமாக பாதித்தது’ - இந்திய ராணுவத்திற்கு 3ஆம் வகுப்பு மாணவரின் நெகிழ்ச்சி கடிதம்!

Published on 03/08/2024 | Edited on 03/08/2024
3rd class student's emotional letter to Indian Army

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில்  முப்படையைச் சேர்ந்த வீரர்கள், பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்ட வீரர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் (03.08.2024) மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவு ஏராளமானோர் உயிரிழந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது. 

இந்த நிலையில், வயநாட்டில் இந்திய ராணுவம் மேற்கொண்ட மீட்பு பணிகள் குறித்து கேரளாவைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘அன்புள்ள இந்திய இராணுவம், நான் ரியான். என் அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பேரழிவையும் அழிவையும் உருவாக்கியது. இடிபாடுகளில் சிக்கியவர்களை நீங்கள் காப்பாற்றுவதைப் பார்த்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நீங்கள் பசியை போக்க பிஸ்கட் சாப்பிட்டு பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். அந்த காட்சி என்னை ஆழமாக பாதித்தது. ஒரு நாள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து என் தேசத்தை பாதுகாக்க ஆசைப்படுகிறேன். மாஸ்டர் ராயன், வகுப்பு 3, AMLP பள்ளி, கேரளா’ எனத் தெரிவித்துள்ளார்.

அந்த மாணவரின் கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அந்த கடிதத்திற்கு இந்திய ராணுவம் பதிலளித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ளதாவது, ‘அன்புள்ள மாஸ்டர் ராயன், உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்களை நெகிழச் செய்தன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். உங்கள் கடிதம் அதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள்தான் எங்களால் முடிந்ததைச் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு நமது தேசத்தைப் பெருமைப்படுத்துவோம். இளம் வீரரே, உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்