புதுச்சேரியில் புதியதாக கட்டப்பட்ட 3 மாடி கட்டடம் அடியோடு சரிந்து விழுந்துள்ளது.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் உள்ள உப்பனாறு கால்வாய் அருகே புதிய பேருந்து நிலையத்திற்கும், காமராஜர் சாலைக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கால்வாயை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஓட்டுநர் சுரேஷ் என்பவர் புதிதாக 3 மாடிக் கட்டடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த கட்டடத்தில் கால்வாயை ஆழப்படுத்தும் பணியால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்டடத்தில் இருந்தவர்கள் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதன் பின்னர் சிறிது நேரத்தில் விரிசல் ஏற்பட்ட 3 மாடி கட்டடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது. அதே சமயம் கட்டடத்தில் இருந்தவர்கள் விரிசல் ஏற்பட்டதும் உடணடியாக வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டடம் சரிந்து விழுந்த போது அங்கிருந்த வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போர் மனதை பதைபதைக்க வைத்தது. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இடிந்து விழுந்த 3 மாடி கட்டடத்திற்கு பிப்ரவரி 1 ஆம் தேதி புதுமனை புகுவிழா நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.