தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நேற்று (30.07.2024) நள்ளிரவு 1 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை 4 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
இதனையொட்டி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சூரல்மலா பகுதியில் தரையிறக்கப்பட்டு இரண்டாவது நாளாக இன்றும் (31.07.2024) மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை கேரளா கண்டிராத மிகப்பெரிய பேரழிவு என நேற்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து வேதனையை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தார். 'அட்டைமலை சூரல்மலா பகுதியில் முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. உணவுப் பொருட்களைக் கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. ஒவ்வொருவராக செல்லும் வகையில் தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எல்.எல்.ஹெச், எம்17 ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சூரல்மலாவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இன்று பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 191 பேர் மாயமாகி உள்ளனர். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் பிரேதப் பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது. 17 லாரிகள் மூலம் தேவையான உதவிப் பொருட்கள் சூரல்மாலாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிய 5,500க்கும் மேற்பட்டோர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உறவுகளை இழந்தவர்களை மனரீதியாக தேற்ற வேண்டியுள்ளது'' என்றார்.