மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதியும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சமீபத்தில் கடந்த 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது 48 தொகுதிகளில் நடைபெற்றது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவின் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
இந்த தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிப்பதற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல், பா.ஜ.க வீழ்த்த வேண்டும் என்பதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை உருவாக்கி இயங்கி வருகிறது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் அடுத்த முறை ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து அரசியல் ஆலோசகரும், தேர்தல் வியூக கணிப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் கணித்துள்ளார். இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, “மோடி 3.0 அரசாங்கம் களமிறங்கத் தொடங்கும் என்று நினைக்கிறேன். மையத்துடன் அதிகாரம் மற்றும் வளங்கள் இரண்டிலும் அதிக கவனம் செலுத்தப்படும். மாநிலங்களின் நிதி சுயாட்சியைக் குறைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியும் இருக்கலாம். பெட்ரோலியம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
பாஜக 370 இடங்களைப் பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும் என்றும் பிரதமர் மோடி கூறிய நாளிலிருந்து, இது சாத்தியமில்லை என்று நான் கூறினேன். இவை அனைத்தும் தொழிலாளர்களின் மன உறுதியை உயர்த்தும் கோஷம். பா.ஜ.க 370 இடங்களைப் பெறுவது சாத்தியமற்றது. ஆனால், அக்கட்சி 270 க்கு கீழே சரியாது என்பதும் உறுதி. முந்தைய மக்களவைத் தேர்தலில் 303 இடங்கள் அல்லது இன்னும் கொஞ்சம் கூடுதலான இடங்களை பா.ஜ.க பெற முடியும் என்று நான் நம்புகிறேன்.
முதலில், 2019 தேர்தலில் பா.ஜ.க 303 இடங்களைப் பெற்ற இடத்தைப் பாருங்கள். அந்த 303 இடங்களில் 250 இடங்கள் வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் இருந்து வந்தவை. இம்முறை இந்த பிராந்தியங்களில் கணிசமான இழப்பை அவர்கள் சந்திக்கிறார்களா என்பது முக்கிய கேள்வி. கிழக்கு மற்றும் தெற்கில், பா.ஜ.க தற்போது மக்களவையில் சுமார் 50 இடங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக, கிழக்கு மற்றும் தெற்கில் பாஜகவின் இடப் பங்கு 15-20 இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் குறிப்பிடத்தக்க இழப்பு எதுவும் இல்லை.
எண் விளையாட்டை விட்டுவிட்டு, ஒரு அரசாங்கம் எப்போது தோல்வியடைகிறது என்பதை கருத்தில் கொள்வோம். ஒரு கட்சி அல்லது அதன் தலைவர் மீது மக்கள் மத்தியில் கணிசமான கோபம் ஏற்படும் போது இது நிகழ்கிறது. பா.ஜ.கவாக இருந்தாலும் சரி, பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியாக இருந்தாலும் சரி, சமூகத்தில் பெரும் பகுதியினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், பிரதமருக்கு எதிராக பரவலான கோபம் இருப்பதாக எந்த தரப்பிலிருந்தும் நாங்கள் கேட்கவில்லை. எனவே, நரேந்திர மோடியை அகற்ற வேண்டும் என்ற உணர்வு தற்போது இல்லை” என்று கூறினார்.