
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அலுவலகம் வருவதைத் தவிர்த்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் வேகமெடுத்து வரும் சூழலில், இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கும் அதிகளவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமாருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அஜய் குமாருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் தெற்கு வளாகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்தின் 35 ஊழியர்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அலுவலகம் வருவதைத் தவிர்த்துள்ளார். இதேபோல மத்திய சட்டத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.