
உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம் என்று இந்தியில் வாதாடிய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கே.எம்.ஜோசப், ஹிரிகேஷ் ராய் அடங்கிய அமர்வின் முன், நேற்று (18.11.2022) சங்கர்லால் சர்மா என்ற முதியவரின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் இல்லாமல் தானே வாதாடிய மனுதாரர் சங்கர்லால், “எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நிறைய நீதிமன்றப் படிகளை ஏறி இருக்கிறேன்” என இந்தியில் கூற, குறுக்கிட்ட நீதிபதி, “உச்சநீதிமன்றத்தில் வழக்காடும் மொழி ஆங்கிலம். உங்கள் மனுவை பரிசீலித்தோம். ஆனால், என்ன சொல்கிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால் நீங்கள் விரும்பினால் உங்களுக்காக வாதாட வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறோம்” எனக் கூறினார்.
இதனை மனுதாரர் சங்கர்லாலுக்கு அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான் மொழிபெயர்த்துக் கூறினார். இதையடுத்து சங்கர்லாலுடன் உரையாடிய பிறகு வழக்கறிஞரை நியமிக்கும் பரிந்துரையை ஏற்க மனுதாரர் சம்மதம் தெரிவித்ததாக மாதவி திவான் நீதிபதிகளிடம் கூறினார்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் இருந்த ஒரு வழக்கறிஞரை, அவரது சம்மதத்துடன் மனுதாரர் சங்கர்லாலுக்கு சார்பாக வாதாடும் இலவச சட்ட உதவியாளராக நீதிபதிகள் நியமித்தனர். அத்தோடு, அந்த வழக்கறிஞரிடம் மனுவை நன்கு பரிசீலித்து வருமாறு கூறி மனு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
மத்திய அரசு தொடர்ந்து இந்தியை அலுவல் மொழியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ள இந்தக் கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.