பெங்களூருவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது தந்தையை தீ வைத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ராஜாஜிநகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜெயின் (41). இவரது மனைவி பூஜாதேவி. இவர்களுக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். ஜெயக்குமாரின் மகள் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 18 வயது மாணவன் ஒருவனை காதலித்து வந்துள்ளார். ஜெய்குமாருக்கு இந்த விஷயம் தெரியவந்த நிலையில், அவர்கள் இருவரையும் கண்டித்ததோடு, தனது மகளின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் மனைவி பூஜாதேவி தனது மகனுடன் குடும்ப விழா ஒன்றுக்காக, புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் ஜெயக்குமாரும், அவர் மகளும் மட்டுமே இருந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில், ஜெயக்குமார் வீட்டு பாத்ரூமில் இருந்து புகை வெளிவந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயை அணைத்தபோது, அங்கு ஜெயக்குமாரின் உடல் கருகிய நிலையில் கிடந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் அவரது மகள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரனையை தீவிரப்படுத்திய நிலையில், தாய் பூஜாதேவி புதுச்சேரி சென்றதும் தனது அப்பாவுக்கு பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தூக்கமாத்திரை பாலை சாப்பிட்டு ஜெயக்குமார் தூங்கியதும், தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார் அந்த மாணவி. பின்னர் இருவரும் சேர்ந்து ஜெயக்குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். பிறகு அவரை குளியலறைக்கு இழுத்து சென்று பெட்ரோல் ஊத்தி எரித்துள்ளனர். எலெக்ட்ரிக் ஷாக் காரணமாக வீட்டில் தீ பிடித்தது என்று நாடகமாட திட்டமிட்டுள்ளனர். ஆனால் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தற்போது இருவரும் சிக்கியுள்ளனர். இதையடுத்து ஜெயக்குமாரின் மகளையும், அவரது காதலனையும், போலீசார் கைதுசெய்தனர். அவர் மகளை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பிரவீனை சிறையில் தள்ளினர்.