விவசாயக் கடன்களை அடுத்த 15 நாட்களுக்குள் தள்ளுபடி செய்வதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி விவசாய சங்கங்களுக்கு உறுதியளித்துள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு முன் அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக ம.த.ஜ. தலைவர் குமாரசாமி வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றி இருந்தாலும், அமைச்சரவை விரிவாக்க இழுபறி காரணமாக அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத சூழலில் இருக்கிறார். இதனை, எதிர்க்கட்சியான பா.ஜ.க. தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், இன்று விவசாய சங்கங்கள் உடனான சந்திப்பில் முதல்வர் குமாரசாமி மற்றும் துணை முதல்வர் பரமேஸ்வரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய குமாரசாமி, ‘இதுகுறித்து விவாதித்து 15 நாட்களுக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும். இந்த 15 நாட்களுக்குள் உங்களது கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் விவசாயிகளைக் காப்பதிலும், நிதி மேலாண்மையைக் கையாள்வதிலும் இந்த அரசு முழு கவனம் செலுத்தும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ‘வங்கிகளிடம் கணக்கு கேட்டு எத்தனை ஆயிரம் கோடியாக இருந்தாலும், அதைச் செலுத்தி விவசாயிகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதே என் அரசின் கடமை. இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’ எனவும் உறுதியளித்துள்ளார்.