
உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே ஆட்சியைப் பிடிப்பதில் கடும் போட்டி நிலவும் என கருதப்படுகிறது.
இதற்கிடையே, பஞ்சாப் தேர்தலையொட்டி பாஜக, கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில், 4 பஞ்சாபி பாடகர்கள் உட்பட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், பிரபலங்கள் என 15 - 20 பேர் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் ஒருவாரத்திற்குள் பாஜகவில் அதிகாரபூர்வமாக இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பாஜகவில் இணையவுள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், ராஷ்ட்ரியா சமாஜ்வாடி காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்தவர்கள் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மாற்றுக் கட்சி முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எல்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு வலுசேர்க்கும் என கருதப்படுகிறது.