
மத்திய அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் சமூகவலைதளங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. இந்தக் கட்டுப்பாடுகளால் ட்விட்டர், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கும் மத்திய அரசுக்குமிடையே மோதல் வெடித்தது. இந்தப் புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. இதற்கிடையே அண்மையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு தடை விதிக்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் எந்த சமூக ஊடகத்தையாவது தடை செய்யும் திட்டம் இருக்கிறதா என கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர், தற்போதைக்கு அவ்வாறான திட்டம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “எந்தவொரு சமூக ஊடகத்தையும் தடை செய்யும் திட்டம், தற்போது மத்திய அரசிடம் இல்லை. சமூக ஊடகங்களில் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலான பதிவுகள் வெளிவருவது குறித்து பயனர்களிடமிருந்து பல்வேறு புகார்கள் அரசுக்கு வருகிறது. அந்தப் புகார்களின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருகிறது. பயனர்களின் பாதுகாப்பு மற்றும் அவா்களின் குறைகளைத் தீா்ப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக, சமூக ஊடகங்களின் பொறுப்பு அலுவலா்களுடன் மத்திய அரசு தொடர்ச்சியாக ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.
இந்திய ஜனநாயகம், அரசியலமைப்பில் தனது அடித்தளத்தைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலமைப்பு ரீதியிலான அடிப்படை உரிமைகளை உறுதி செய்துள்ளது. எந்தவொரு சமூக ஊடகமோ அல்லது வேறு தளமோ நமது ஜனநாயகத்தை அழித்துவிட முடியாது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்காகவும், இந்தியாவின் பாதுகாப்பிற்காகவும், பொது ஒழுங்கையும் வெளிநாடுகளுடனான நட்புறவையும் பாதுகாக்கும் வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையிலான ஆன்லைன் பதிவுகளை மத்திய அரசு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69ஏ-இன் அடிப்படையில் முடக்கிவருகிறது.”
இவ்வாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.