தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா, தற்போது 91 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அதற்கு ஒமிக்ரான் வகை கரோனாவே காரணம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில், இந்தியாவிலும் 101 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (17.12.2021) செய்தியாளர்களைச் சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால், ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் தினசரி 14 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "இங்கிலாந்தில் கரோனா பரவும் அளவைப் பார்க்கையில், இந்தியாவிலும் அதேபோன்ற பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 14 லட்சம் பாதிப்புகள் பதிவாகும். பிரான்சில் 65,000 வழக்குகள் (ஒரேநாளில்) பதிவாகியுள்ளன. இந்தியாவிலும் இதேபோன்ற ஒரு பரவல் ஏற்பட்டால், நமது மக்கள்தொகையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நாளும் 13 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்" என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா, "இது அத்தியாவசியமற்ற பயணங்கள், பெரிய கூட்டங்களைத் தவிர்க்க வேண்டிய நேரம். கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொள்வது முக்கியம்" என கூறியது குறிப்பிடத்தக்கது.