வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவில், நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 'மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீட்டில்தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கானது மட்டுமல்ல, 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கும், அருந்ததியினர் பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரப்பட்டது. ஒட்டுமொத்த நிர்வாகமும் இந்த தடை உத்தரவின் மூலம் பெரும் இன்னல்களைச் சந்தித்துள்ளது' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மட்டுமில்லாது பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பிலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று (16.12.2021) இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், இந்த வழக்கில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த தடையால் கலந்தாய்வு, வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்றார். இதேபோன்ற வாதங்களை பாமக உள்ளிட்ட கட்சிகளின் வழக்கறிஞர்களும் எடுத்துவைத்தனர்.
“அதிகப்படியான மனுக்கள் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கூடியவரை எழுத்துப்பூர்வமான வாதங்களை விரைவில் தாக்கல் செய்யுங்கள். தற்போது இதில் தடை விதிக்க நாங்கள் விரும்பவில்லை. மதுரை கிளையின் தீர்ப்பு தொடரும். இந்த வழக்கு விசாரணை பிப். 15,16 வரை தொடரும். அதுவரை இந்த மதுரை கிளை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடரும். அதுவரை பணி நியமனம், கல்வி சேர்க்கை இந்த ஒதுக்கீட்டில் நடைபெறாது, நடைபெறக் கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.