Skip to main content

தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்காதது ஏன்? துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? எடப்பாடியிடம் சரமாரி கேள்வி..!

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
opss eps

 

 


மக்களை சென்று சந்திக்கவில்லை என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைமைச் செயலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்,
 

கேள்வி: தூத்துக்குடி மக்களை நேரில் சந்திக்காதது ஏன்?

பதில்: மக்களை சென்று சந்திக்கவில்லை என்று சொல்வது தவறான குற்றச்சாட்டு. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவில் பொதுக்கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது. ஆனால் ஒரு சில விஷமிகளோ, அரசியல் கட்சிகள் தலைவர்களும் சுயநலத்திற்காக அப்பாவி மக்களை பயன்படுத்தி இப்படி ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது நடக்கக்கூடாது என்பதற்கு தான் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் ஸ்டாலின் போய் சந்தித்து வந்துள்ளார். முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும், இயல்பு நிலை திரும்ப வேண்டும், மக்கள் அச்சத்தை போக்க வேண்டும். பொதுச்சொத்துக்கு எந்த வித சேதமும் விளைவிக்கக்கூடாது என்பதற்குத் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேள்வி: துப்பாக்கி சூடு நடத்துவதற்கான காரணம் என்ன?

பதில்: நாங்களும் இங்கே தான் இருக்கிறோம். ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போது அமைதியான முறையில் தான் நடத்தினார்கள். ஆனால் இந்த முறை அப்படி அல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு சில அரசியல் கட்சித் தலைவர்கள் சில சமூகவிரோதிகளும் இதில் ஊடுருவி இந்த அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். ஆகவே அன்று ஊர்வலம் வந்தவர்கள் அங்கே உள்ள காவல்துறையினரை தாக்கிய பிறகு முதலில் காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசினார்கள், பின்னர் தடியடி நடத்தினார்கள். அதையும் மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் இருக்கும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்படுகிறது. அதற்கு அருகாமையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்குள் சென்று அங்குள்ள வாகனத்திற்கு தீ வைத்து விட்டு உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இவை அனைத்தையும் தொலைக்காட்சிகளில் பார்த்து தான் நாங்களும் தெரிந்துகொண்டோம். இப்படிப்பட்ட மோசமான, பதட்டமான சூழலில் இப்படி ஒரு நிகழ்வு நடைபெற்றது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

 

கேள்வி: துப்பாக்கி சூடு நடத்த அனுமதி அளித்தது யார்?

பதில்: அனுமதி என்பதே இங்கு இல்லை. உங்களை ஒருவர் அடித்தால் உடனடியாக அதனை தடுப்பதற்கான வழியை தான் செய்வீர்கள். இதுதான் இயற்கை. ஆகவே இதனை யாரும் திட்டமிட்டு செயல்படுவது கிடையாது. இப்படியெல்லாம் சம்பவம் நடைபெறும் என்று நினைத்தால் முன்னெச்சரிக்கையாக கைது செய்வார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் போராட்டம் நடைபெறும் போது அமைதியாக ஊர்வலம் சென்று மாவட்ட ஆட்சியிரிடம் தங்களது குறைகளை கூறி செல்வார்கள். அரசுக்கு தெரிவிப்பார்கள். அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். ஆகவே தொடர்ந்து அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதை சில அரசியல் கட்சித் தலைவர்களும், சில சமூகவிரோதிகளும் ஊடுருவி இதனை ஒரு தவறான பாதையில் அழைத்துச்சென்ற காரணத்தினால் தான் இப்படிப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

சசிகலா மேல்முறையீட்டு மனுவில் இன்று விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

nn

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.