Skip to main content

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்: வேல்முருகன் கைது

Published on 01/04/2018 | Edited on 01/04/2018


 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் 42 சுங்கச் சாவடிகளில் சுங்க வரி செலுத்த மறுத்து முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜேஷ் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை காவல்துறை டி.எஸ்.பி. ராஜேந்திரன், திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் உள்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 

காலை 11.05 மணிக்கு உளுந்தூர்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், இளைஞரணி அமைப்பாளர் கோபி உள்பட 500க்கும் மேற்பட்ட தமிழக வாழ்வுமைக் கட்சியினர் வேல்முருகன் தலைமையில் வந்தனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். திடீரென சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடி அறை, சேர், டேபிள், கண்காணிப்பு கேமரா ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். வேல்முருகன் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உளுந்தூர்பேட்டை அன்பு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். 
 

அப்போது நக்கீரன் இணையதளத்திடம் பேசிய வேல்முருகன், 
 

மத்திய அரசு தமிழகத்தை பல விதங்களிலும் வஞ்சிக்கிறது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதோடு அதற்கான உபயோகமில்லாத காரணங்களை சொல்லி ஏமாற்றுகிறது. ஸ்டெர்லைட் போன்ற தேவையில்லாத தொழிற்சாலைகளை தமிழகத்தில் கொண்டு வந்து தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிக்கிறது. இதன் மூலம் தமிழ் சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்து வருகிறது. 
 

இந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தை மட்டும் குறி வைத்து மறைமுக தாக்குதல் நடத்துவதற்கு காரணம், தமிழகத்தில் சமூக நீதி, சாதி மதமற்ற முறையில் பல்வேறு இன மக்கள் ஒற்றுமையோடு வாழ்கிறார்கள். தமிழர்களுக்கான பண்பாடு, கலாச்சாரம் உலக அளவில் தனித்தன்மையோடு விளங்குகிறது. பாஜக எக்காலத்திலும் தமிழகத்தில் தலையெடுக்க முடியாது என்பது அவர்களுக்கு உறுதியாக தெரியும். அதனால்தான் மறைமுகமாக வடமாநிலங்களில் இருந்து ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு சார்ந்த பணிகளில் ஒரு கோடி பேருக்கு மேல் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் திணிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பலகோடிக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் நிலையில் மத்திய அரசின் சூழ்ச்சியின் மூலம் மேற்படி சம்பவங்கள் நடக்கின்றன. 
 

மத்திய அரசை கண்டிக்கும் வகையில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதனால்தான் பிஎஸ்என்எல் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தினோம். இன்று 42 இடங்களில் சுங்க கட்டண வரி கொடுக்க மறுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இதேபோல தமிழக மக்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தக் கூடாது. மாநில அரசும் மத்திய அரசுக்கு சேர வேண்டிய வரியை கொடுக்காமல் நிறுத்த வேண்டும். இப்படி தமிழக அரசும், தமிழக மக்களும் வரி கொடா இயக்கத்தை நடத்த வேண்டும். அப்போதுதான் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை நிறுத்துவார்கள். கடுமையான போராட்டத்தை கையில் எடுத்தால்தான் தமிழகத்திற்கு விடிவுகாலம் வரும். இவ்வாறு கூறினார். 
 

சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் தப்பியோடினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றதும். வாகனங்கள் சென்றன. ஆனால் சுங்கச் சாவடியில் வசூல் செய்ய ஊழியர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் சந்தோசமாகவும், வேகமாகவும் சென்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசின் அரசாணை சமூகநீதிக்கு எதிரானது! -வேல்முருகன் கண்டனம்!

Published on 24/01/2021 | Edited on 24/01/2021

 

T. Velmurugan - TVK PARTY

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், மாநில அரசு நடத்தும் 'செட் தேர்வு, தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நெட் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற்றவர்கள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.


                        
இந்த நிலையில், இந்த பணியிடங்களை நிரப்பப்படும் போது ஆய்வு படிப்புகளை (பி.ஹெச்.டி.) முடித்தவர்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் என எடப்பாடி அரசு அறிவித்திருக்கிறது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்துள்ளது உயர்கல்வித்துறை. 


                      
இந்த அரசாணைக்கு எதிராக தமிழக எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனறர். இது குறித்து கண்டன் தெரிவித்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் , ''முதுகலை மற்றும் எம்.பில் பட்டம் பெற்றுவர்கள், பி.எச்.டி முடித்தவர்கள், இந்த செட், நெட் தேர்வை எழுதலாம். தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் வழிகாட்டுதலின்படி,  உதவிப் பேராசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு வருவது வழக்கமாகும்.


                       
இந்நிலையில் வரும் ஜூலை 1 முதல் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.


  
                   
உயர்கல்வித் துறையின் அரசாணையின் காரணமாக, முதுகலை மற்றும் எம்.பில்., பட்டம் பெற்று, 'செட்', 'நெட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சியும் பெற்று,  உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்புக்காக போராடி வரும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.


                        
ஏழை, எளிய மாணவர்கள், முதுகலை, எம்.பில்., படித்துவிட்டு அதற்கு மேலும் பி.எச்.டி., ஆய்வு மேற்கொள்வது என்பது முடியாத காரியமாகும். அதே போன்று, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பி.எச்.டி., ஆய்வுப் படிப்பைத் தொடருவதற்கு கல்வி நிறுவனங்களில் ஊக்கத்தொகையோ, அல்லது மத்திய, மாநில அரசுகளின் உதவித் தொகையோ அனைவருக்கும் கிடைப்பது இல்லை.


                     
இச்சூழலில், பி.எச்.டி. முடித்தால்தான் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கவே முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.    எனவே, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பி.எச்.டி. முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற உயர்க்கல்வித்துறையின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக!

 

 

 

Next Story

வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்: வேல்முருகன் அறிவிப்பு! 

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

T. Velmurugan

 

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலைஉயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 26.12.20 அன்று காலை 10 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு, ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.


இந்த நிலையில், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறப்போவதில்லை என, மத்திய வேளாண்துறை அமைச்சர்  நரேந்திர சிங் தோமர் திமிராகப் பதிலளித்துள்ளது கண்டனத்துக்குரியது. விவசாயிகள் கடந்த 29 நாட்களாகப் பனியிலும், பட்டினியிலும் இரவு பகல் பாராமல் போராடி வரும் நிலையில், மத்திய அமைச்சர் தோமரின் பேச்சு, அரசின் ஆணவத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

 

ஆர்.எஸ்.எஸ்-ன் அறிவுரையின் பெயரில் மோடி, புதிய வேளாண் சட்டங்களை நியாயப்படுத்திப் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி, விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு, போராட்டத்திற்குப் பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாகப் போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

 

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் மீது போர் தொடுத்துள்ள மோடி அரசு, மறுபுறம், எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தி நாட்டு மக்கள் மீது போரை நிகழ்த்தியுள்ளார்.

 

கடந்த நவம்பர் மாதம் வரை ரூ. 610 -ஆக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.710-ஆக உயர்த்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் இரு கட்டங்களாக எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் சாமானியர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

 

cnc

 

எரிவாயு விலை உயர்வு ஒருபுறமிருக்க, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட ரூ.90-ஐ நெருங்கிவிட்டது பெட்ரோல் விலை. பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வு நேரடியாக, நாட்டு மக்களைப் பாதிக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரியைக் குறைக்காமல், பாஜக அரசு உயர்த்தியே வந்துள்ளது. இதன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை, எரிவாயு சிலிண்டர் உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

 

எனவே, புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும், எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 26.12.2020 அன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு, பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.