உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.செலமேஸ்வர் குற்றச்சாட்டு.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையே இருப்பதில்லை என குற்றம்சாட்டி, நீதிபதி செலமேஸ்வர் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் இந்திய வரலாற்றில் முதன்முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று நீதிபதி செலமேஸ்வர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவி உயர்வு பெறுவதில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி பேசினார். நீதிபதிகள் தங்கள் சிறந்த செயல்பாடுகளுக்காக அல்லாமல், எப்படி மற்றவர்களைக் ஈர்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்திய உயர் நீதித்துறை - சிக்கல்களும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் அவர் இவ்வாறு பேசினார். மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கான நியமனத்தில் ஈடுபடுபவர், அது தொடர்பான விவரங்களை பதிவுசெய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒன்றும் எப்போதுமே நடந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக, ஒருவர் எப்படி ஈர்க்கிறார் என்பதைப் பொறுத்தே நியமனம் நடக்கிறது. ஆனால், இந்த நிலை மாற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.