காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டி தமிழகத்தை ஆளும் அதிமுக, இன்று மாவட்ட தலைநகரங்கள் முழுவதும் உண்ணாநிலை போராட்டத்தை நடத்தியிருக்கிறது.
திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் உணவு அமைச்சர் காமராஜ் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், பா,வளர்மதி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவுசெய்தனர்.
போராட்டத்தில் பேசிய அனைவருமே, காவிரி பிரச்சினைகளை பற்றிபேசியதைவிட திமுகவைத்திட்டித்தீர்த்ததே அதிகம். விவசாய சங்கதலைவர்களுல் ஒருவரான மன்னார்குடி காவிரி ரெங்கநாதன் உள்ளிட்டவர்களும் திமுகவை மறைமுகமாக சாடினர்.
போராட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் போனதற்கு காரனம் கலைஞர் தான். இதை நான் கூறவில்லை முன்னால் முதல்வர் பக்தவச்சலம் கூறியிருக்கிறார், ஒவ்வொரு முறையும் நமக்கு நீதிமன்றங்களால் தான் காவிரி பிரச்சினையில் நன்மை கிடைத்திருக்கிறது. மீண்டும் சட்டப்போராட்டம் நடத்துவோம், "என்று காவிரி பிரச்சினை குறித்து எழுதிவந்ததை உலறியபடியே பேசிமுடித்தார்.
இறுதியாக பேசிய வளர்மதியோ," காவிரி பிரச்சினை இருநூறு வருட பிரச்சினை, அதற்கு ஜெயலலிதாதான் தீர்வுகண்டார். அவர்வழியில் ஆட்சிசெய்யும் நாங்களும் தீர்வு காண்போம். ஆனால் காவிரி உரிமையை விட்டுக்கொடுத்த திமுக மத்திய அரசுக்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுக்கனும்னு பேசுறாங்க, இதவிட எப்படி அழுத்தம் கொடுக்கிறது, உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க செய்கிறோம், "என திமுகவை சாடினார்.
பிறகு, "எவனவனோ கட்சி துவங்குறான். அதுல ஒருத்தன் இந்த உண்ணாவிரதமெல்லாம் நாடகம், வேஷ்ட்ங்கிறான், நாங்க உண்ணாவிரதம் நடத்தினா வேஷ்ட், ஆனா தஞ்சாவூர்ல நாளுபேர கூட்டி உண்ணாவிரதம்ங்கிற பேர்ல போட்டோவுக்கு ஃபோஸ் கொடுத்தா அது சரி, உன்னோட வேஷமெல்லாம் எங்ககிட்ட நடக்காது, எங்களிடம் இரட்டை இலை இருக்கு, எம்,ஜி,ஆர், ஜெயலலிதா ஆத்மா இருக்கு," என டி,டி,வி,தினகரனை ஒரு பிடி பிடித்தார்.
மேலும்," இன்னொருத்தன் சிஸ்டம் சரியில்லங்கிறான், சிஸ்டம் சரியில்லான்னா சர்வீஷ்க்கு போ அதவிட்டுட்டு சிஷ்டம் சரியில்லன்னு தமிழ்நாட்டுல திரிஞ்சா அடையாளம் இல்லாம போயிடுவ, என ரஜினியின் அரசியலை பற்றிப்பேசியவர். கமலையும் ஒரு பிடிபிடித்தார்.
அதோடு, ஜெயலலிதாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மூன்றாவது நாள் மருத்துவமனையே பரபரப்பாக இருந்தது, மருத்துவர்களிடம் விசாரித்தோம், ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்குறித்து சில விவரங்களை அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார், என்றனர். அப்படி இறக்கும் சமயத்தில் கூட காவிரிக்காக பேசியவர் ஜெயலலிதா. " என்றார்.