Skip to main content

'ஆளுநர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில்' - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் 

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

NN

 

தமிழக ஆளுநர் மற்றும் அவர் தொடர்புடைய விவகாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

 

சட்ட மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஆளுநர் தவிர்த்து வருவதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழ்நாடு அரசு தரப்பில் மூன்று வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர்.

 

கைதிகளை முன்னரே விடுவிக்கும் கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாமல் மறுக்கிறார். அரசின் பயண நியமனங்கள் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்காமல் வைத்திருக்கிறார். 12 முக்கியமான காலி பணியிடங்களில் 10 பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்புகளை கிடப்பில் ஆளுநர் போட்டு வைத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி நிறைய மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. ஆளுநர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'As Soon As Possible' என்ற வார்த்தையைத் தமிழக ஆளுநர் தவறாகப் புரிந்துகொண்டு தவறான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றார். ஆளுநரின் செயல் தமிழக அரசின் உரிமையை மட்டுமல்ல, தனிமனித உரிமையையும் பறிக்கிறது. தமிழகம் முதல் காஷ்மீர் வரை மாநில அரசுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஆளுநர்கள் போடும் முட்டுக்கட்டைகள். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போன்று செயல்படுகின்றனர். காரணமே இல்லாமல் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள் என பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளைத் தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூன்று வழக்கறிஞர்களும் வைத்தனர். 

 

இந்தக் குற்றச்சாட்டுகளைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வரும் வாரம் தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை தீபாவளி விடுமுறைக்கு பின் விசாரிக்கலாமா எனக் கேட்டதோடு, வரும் திங்கள் அல்லாமல் அடுத்த திங்கள் இந்த வழக்கு முழுமையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் தமிழக அரசு ஆளுநர் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்