தண்டனை காலம் முடிந்து ஒரு வாரத்தில் விடுதலையாகவிருந்த சசிகலா, கரோனா தொற்றினால் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையின் தீவிர் சிகிச்சைப் பிரிவில் அட்மிட் ஆகியிருக்கிறார். மூச்சுத் திணறல் அதிகமாக இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்றும், மிக கடுமையான அளவில் நுரையீரலில் தொற்று பரவியிருப்பதாகவும், நிமோனியா காய்ச்சல் குறைய மறுப்பதாகவும் பெங்களூரில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சிறையில் தனிமையில் இருந்த சசிகலாவுக்கு கரோனா தொற்று எந்த வகையில் தாக்கியிருக்க முடியும்? என்கிற சந்தேகத்தை சசிகலா குடும்பத்தினர் கிளப்பி வருகின்றனர். இதற்கிடையே, சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை அவரது உறவினர்கள் பலரும் நெருங்கி நலம் விசாரித்ததால் அவர்களுக்கும், சசிகலாவைச் சுற்றி நின்ற பாதுகாப்பு போலீஸார்களுக்கும், சிறைத்துறை அலுவலர்களுக்கும் கரோனா தொற்று பரவியுள்ளதா என பரிசோதிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குத் தெரிவித்துள்ளது விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம்!
இது மட்டுமல்லாமல் கடந்த 1 வாரமாக சிறையில் இளவரசியுடன்தான் பகல் முழுவதும் இருந்துள்ளார் சசிகலா. அதனால், இளவரசிக்கும் கரோனா டெஸ்ட் எடுக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கர்நாடக அரசுக்குத் தெரிவித்துள்ளனர்.