2010-இல், நாம் தமிழர் கட்சியை துவக்கியபோது “புலிச் சின்னம் சோழர்களின் சின்னம். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சின்னமும் அதுவே. எனவேதான் நாம் அதனை வரித்துக் கொண்டுள்ளோம்.” என்று விளக்கம் தந்தார் சீமான்.
ஆனால், ஆண்டிபட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடமிருந்து இன்று வெளிப்பட்ட ஆதங்கம் இது: “பிரபாகரன் உயிருடன் இல்லை என நினைத்து அவரது கொடியை சீமான் பயன்படுத்தி வருகிறார்”
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, ‘பிரின்சு என் ஆர் சமா’ என்பவர் ‘கொடித் திருடர்களை வேரறுப்போம்! தமிழீழ இலச்சினைகளை மீட்டெடுப்போம்!’ என்னும் தலைப்பில், தன் குமுறலை இவ்வாறு கொட்டியிருக்கிறார்:
"இந்தக் கொடிக்குரிய மரியாதை எத்தகையது தெரியுமா? தமிழீழத் தேசியக் கொடியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கே ஒரு பயன்பாட்டுக் கோவையை உருவாக்கி, அதன்படி மதிப்பளித்து வந்தனர் புலிகள். அத்தகைய கொடியைத் தான் கீழ்மைப்படுத்தி வருகின்றனர் இந்தச் சிறுமதியாளர்கள்.
தமிழீழம் என்னும் கனவைச் சுமந்தும், புலிகளையும், தலைவர் பிரபாகரனையும் நேசித்தும் வருவோர்க்கு தமிழீழக் கொடி தரும் உணர்வு எத்தகையது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. ஈழத் தமிழர்க்கென்றொரு நாடு அமைவதை, நாடு கடந்தும் தன் நாடாகப் பார்க்கும் மனம் அது. துப்பாக்கித் தோட்டாக்கள் தெறிக்க, முன்னங்கால் பறக்க கூண்டை விட்டுப் பாயும் புலியின் உருவம் தரும் சிலிர்ப்பும், எழுப்பும் உணர்வலையும் நம் உயிர் அடங்கும் வரை ஓயாதது.
அத்தகைய உயர் சின்னத்தை, உயிர்க் கொடியை, உலுத்தர் கூட்டம் பயன்படுத்துவதையும், அதனால் அது கீழ்மையுறுவதையும் காணச் சகிக்கவில்லை. சிந்தை பொறுக்கவில்லை. புலிகள் தங்களை மௌனித்துக் கொண்டபிறகு முளைத்த காளான்களெல்லாம் புதிது புதிதாய் கதையளந்துகொண்டும், புலி வேஷம் கட்டிக் கொண்டும் அலைந்து கொண்டிருப்பதும் காலத்தின் கொடுமை.
இந்தக் கொடி கேடர்களின் திருட்டுச் செயலால், இவர்களின் செயல் பொறுக்காமல், ஜாதி வெறி பிடிக்காமல் இந்தக் கும்பலிலிருந்து வெளியேறும் நபர்கள் நாம் தமிழரை எதிர்க்கிறேன் என்று இவர்களால் திருடி வெளியிடப்பட்ட உயரிய புலிக் கொடியினைக் காலால் மிதித்து ஒளிப்படங்களை வெளியிடும் கொடுமை நடக்கிறது.
நாம் தமிழர் கட்சி தொடங்கிய பொழுது இருந்த கொடி
தற்போதைய நாம் தமிழர் கட்சி கொடி
நாம் தமிழர் என்று ஆதித்தனாரின் கட்சிப் பெயரைத் திருடி இவர்கள் அமைப்புத் தொடங்கியது, புலிகளும், தலைவர் பிரபாகரனும் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கக் கூடும் என்று கருதப்பட்ட காலத்தில்!
அப்போது இவர்கள் பயன்படுத்திய கொடி சூரியன் போல் தோன்றும் கம்பி வளையத்திலிருந்து இடுப்பு வளைந்து வெளியேறும் புலி சின்னம் பொறித்ததாகும். ஆனால், புலிகளும், தலைவரும் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று இவர்களுக்கு உறுதியானபின், நேரடியாக புலிகளின் கொடியும், தமிழீழக் கொடியுமாய் பயன்படுத்தப்பட்ட புலியின் ஓவியத்தையே பயன்படுத்தி, சிவப்புப் பின்புலத்தில் கால்களை மட்டும் நீக்கிவிட்டு கம்பி விட்டுப் புலி பாய்ந்து வரும் கொடியையே நாம் தமிழர் கொடி என்று திரித்துப் பயன்படுத்துகின்றனர்.
ஈழத்தைக் காட்சிப் பொருளாக்கி, தமிழர் உரிமையையும், உணர்வையும் விற்பனைப் பொருளாக்கி கல்லா கட்டும் நாம் தமிழர் கும்பலிடமிருந்து தமிழீழ கொடி, இலச்சினை, பாடல் போன்றவற்றை மீட்க வேண்டியது அவசியமாகிறது. எத்தனை மாற்றுக் கருத்து இருந்தாலும், தமிழின உணர்வாளர்களுக்கு இந்த கும்பலின் துரோகம் ஏற்பாயிருக்க முடியாது."
வைகோ மற்றும் பிரின்சு என்.ஆர்.சமா போல அனேகர் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் 1990-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி குறித்த பெருமிதமான பலரது பதிவுகளையும், அவர்களது உணர்ச்சிப் பெருக்கினையும் வலைத்தளங்களில் காணமுடிகிறது.