உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு கொடுப்பது நடைபெற்று வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றி அ.தி.மு.க.வினரை மிரள வைத்துவிட்டது. மேலும் நகர்ப்புற தேர்தல் வந்தால் என்ன செய்வது என புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் அதிமுக- வினர் பொங்கல் பரிசு வழங்கி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட திட்டமிட்டனர்.

அதன்படி வத்தலகுண்டு நகர்புற பகுதியில் (08.01.2020) அன்று மாலை அதிமுக சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரூபாய் 1000 பணமும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை அதிமுக கட்சியின் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர்.
மேலும் அரசின் திட்டங்கள், இரட்டை சிலை சின்னம் அச்சிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களும் பொங்கல் தொகுப்புடன் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக (09.01.2020) அன்று காலை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்ற அதிமுகவினர் அரசு அறிவித்த பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 பணத்தை வழங்கி இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க மறந்துராதீங்க எங்களைக் கைவிட்டு விடாதீர்கள் என அனைத்து பொது மக்களிடம் கேட்டு வருகின்றனர்.
ஒன்றிய பகுதி அனைத்தையும் திமுக தன் வசமாக்கிக் கொண்ட நிலையில், நகர்ப்புறத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் அரசு கொடுக்கும் பணத்தையும், பரிசுத்தொகுப்பையும் தங்களுக்கு சாதகமாக்கி வாக்கு சேகரித்து வருகின்றனர்.