தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பதவியேற்றார். பதவியேற்றவுடன் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர்.
எஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் செல்லவில்லை. மற்றவர்கள் சென்றுள்ளனர். இதில் மற்றவர்களை அனுப்பிவிட்டு எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி ஐஜி உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தொடர்பாக அவரது வீட்டில் விசாரணை நடத்தினார். இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தத ஐஜி சங்கர் கூறுகையில், “சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து நடுநிலையான ஒரு விசாரணை தொடங்கி இருக்கிறது. விசாரணை போகப்போக உங்களுக்கு முடிவு தெரியும். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாலை நேரத்திற்குள் உங்களுக்கு தெரிந்துவிடும் அல்லது இன்று இரவுக்குள் உங்களுக்கு முடிவு தெரியும் என்றார்.
இந்தநிலையில்தான் எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் வராததால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளனர்.