முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
3 கோடி ரூபாய் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துத் தேடிவந்த நிலையில், அவர் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரும் 6 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கர்நாடகவின் ஹசன் பகுதியில் அருகே கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவருடன் அவரது உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஹசன் பகுதியில் பி.எம் சாலையில் வாகனத்தில் ஏறி தப்ப முயன்ற ராஜேந்திர பாலாஜியை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். அப்பொழுது அவர் காவி வேட்டி, டி-ஷர்ட் உடையில் இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் உதவியுடன் கர்நாடகாவில் பல இடங்களில் அவர் தலைமறைவில் இருந்ததாக கூறப்படுகிறது.