தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாகத் திரும்பத் திரும்ப, உண்மைக்கு மாறான பல்லவியையே பாடிக்கொண்டிருக்கிறது முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு.
மூன்றே நாளில் கரோனா ஒழிந்துவிடும் என்று ஏப்ரல் 16-இல் முதல்வர் எடப்பாடி பிரகடனம் செய்த பிறகுதான், கரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 25-ஆம் தேதி மட்டும் தமிழகத்தில் 3,509 பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதன்படி தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 70,997 பேர். இதில் சென்னைவாசிகள் மட்டும் 47,650 பேர். தலைநகரான சென்னை இப்போது கரோனாவிடம் திணறிக்கொண்டிருக்கிறது.
கரோனா பரவலைக் தடுப்பதில் தெளிவாக பார்வை இல்லாத அரசு, முதலில் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களின் மீது பழி போட்டு நாட்களை நகர்த்தியது. கோவை ஈஷா மையத்தில் லட்சகணக்கானவர்களை கூட்டிவைத்துக்கொண்டு ஜக்கி வாசுதேவ், சிவராத்திரி கொண்டாடியதெல்லாம் அதன் கண்களில் அப்போது தட்டுப்படவில்லை.
பின்னர் சென்னை கோயம்பேட்டில் கூடிய கூட்டத்தால்தான் கரோனா வேகமெடுத்தது என்று, அதிகாரத்தில் இருக்கும் அத்தனை பேரும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தண்டோரா போட்டார்கள். ஏறத்தாழ 20 நாட்களுக்கும் மேலாக கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் முண்டியடித்தபோது, முதல்வர் உட்பட தமிழக அரசே, வனவாசம் போயிருந்ததா? என்று தெரியவில்லை.
கோயம்பேட்டில் கூட்டம் நெருக்கியடிப்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டி எச்சரித்த போதும், எதிர்க் கட்சித் தலைவர்கள் அந்த நிலையைக் கண்டித்த போதும், அமைதியாக இருந்த அரசு, அங்கே பந்தோபஸ்துக்குப் போன காவல்துறை அதிகாரிகள் பலரும் தொற்றுக்கு ஆளான பிறகே, சுதாரித்துக்கொண்டு, கோயம்பேடு கூட்டத்தைக் கலைத்தது. காசிமேடு மீன் சந்தையிலும் இதேமாதிரியான தள்ளுமுள்ளுகள்தான் நடந்தது. அவற்றையெல்லாம் உடனுக்குடன் தடுக்காமல் அரசு வேடிக்கைதானே பார்த்தது?
ஐந்தாவது ஊரடங்கும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் முழு ஊரடங்கும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், எக்குத்தப்பாய் கரோனா தொற்று வேகம் எடுத்திருப்பதற்குக் காரணம், ஊரடங்கை அறிவித்துவிட்டு, கூடவே ஆயிரத்தெட்டு தளர்வுகளையும் அறிவித்து, அதன்மூலம் ஊரடங்கில் ஓட்டை போட்டதுதான்.
மக்கள் நடமாட்டம் மூலம் கரோனா வேகமாகப் பரவும் என்பதால்தானே ஊரடங்கு போடப்பட்டது. அந்த நிலையிலேயே, ஜுவல்லரிகளுக்கும் மால்களுக்கும் ஏனைய வியபார நிறுவனங்களுக்கும் அனுமதி அளித்தது எதற்காக? மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காகவா?
அதுபோல் மதியம் 2 மணிவரை சில மண்டலங்களிலும் மாலை 6 மணிவரை சில மண்டலங்களிலும் கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்திருப்பது என்ன மாதிரியான அறிவியல் பார்வை? அந்த நேரங்களில் பரவமாட்டோம் என்று கரோனா வாக்குமூலம் கொடுத்திருக்கிறதா?
கரோனாவைத் தடுப்பதிலும் மக்களைப் பாதுகாப்பதிலும் அரசுக்கு எவ்வளவு அக்கறை என்பது டாஸ்மாக் விவகாரத்திலேயே தெரிந்துவிட்டதே. அதிலே அரங்கேறிக்கொண்டிருக்கும் குளறுபடிகளை எல்லாம் 'நக்கீரன்' உள்ளிட்ட ஊடகங்கள் எழுதி எழுதி கைசோர்ந்துவிட்டன. எனினும் அங்கே தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார்கள். டாஸ்மாக்கிற்கு வரும் ’குடி’மக்களை நாங்கள் தீண்டமாட்டோம் என்று கரோனாக் கிருமிகள், ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறதா என்ன?
ஊரடங்கை அறிவித்த அரசுகள், பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தபடி அவர்கள் முழுமையாக ஊரடங்கைக் கடைப்பிடிக்க என்னவழி என்று யோசிக்கவே இல்லை. அதுமட்டுமில்லாமல் கரோனா பரிசோதனை மையத்தைத் கூட ரிப்பன் வெட்டி திறக்கும் விளம்பரம் மோகம் நம் மாண்புமிகுக்களுக்கு குறையவே இல்லை. தொடர்ந்து மக்களைக் கூட்டி நலத்திட்ட விழாக்களில் கலந்துகொண்டு அவர்கள், அவர்கள் போக்கிலேயே இருக்கிறார்கள். சமூக இடைவெளிக் கவலை எல்லாம் அவர்களை நெருங்குவதே இல்லை.
கரோனாத் தொற்றால் மக்கள் மரண பீதியில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், அரசு, டெண்டர் விவகாரங்களிலும், கட்டுமானப் பணிகளிலும், நலத்திட்ட விழாக்களிலும் அதிதீவிர அக்கறை காட்டிவருவது, மக்களை மேலும் பயமுறுத்திக் கொண்டு இருக்கிறது. முதல்வரும் அமைச்சர்களும் தொடங்கி வைக்காமல் புதிய திட்டங்கள் செயல்படவே கூடாதா? இதுபோன்ற அரசு விழாக்களிலும் கூட அரசியல் தாக்குதல்களை அவர்கள் தாறுமாறாகவும் நாகரிகமில்லாமலும் நடத்தி வருவதுதான் கவலைக்குரியது.
25 ஆம் தேதி கோவையில் அரசு நலத் திட்டத்தைத் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி, அதே சூட்டோடு “மருத்துவ நிபுணர் குழு அறிவுரைகளைப் பின்பற்றி இருந்தால் தி.மு.க. ஒரு எம்.எல்.ஏ.வை இழந்திருக்காது. அதிகாரிகள் மூலம் நிவாரணப் பொருட்களை தி.முக. வழங்கியிருந்தால் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது” என்று, எதிர்கட்சியில் நிகழ்ந்த ஒரு மரணத்தை அரசியல் ரீதியாக விமர்சித்திருக்கிறார். அந்த அசம்பாவிதத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் கவனமின்மைதான் காரணம் என்று சொல்லாமல் சொல்கிறார்.
அப்படியென்றால், முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் தாமோதரன் கரோனாவில் இறந்ததும், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொற்றுக்கு ஆளாகியிருப்பதும், முதல்வரின் புகைப்பட நிபுணர் மோகன் கரோனாவால் பாதிக்கப்படிருப்பதும், தலைமைச் செயலகத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கரோனாவின் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதும் யாருடைய கவனமின்மையால்?
மரண பீதி சூழ்ந்திருக்கும் இந்த நேரத்திலாவது லாவணி கச்சேரியில் அக்கறை காட்டாமல், மக்களின் பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தவேண்டும்.