Skip to main content

‘ஜெயலலிதாவுக்கு அஞ்சினோம்; அடிபணிந்தோம்! மோடிக்கெல்லாம் நோ!’ -எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக மதுரையில் போஸ்டர்!

Published on 06/08/2020 | Edited on 10/08/2020

 

 

சுவர் விளம்பரமோ, பத்திரிக்கை விளம்பரமோ, அரசியல் கட்சியினர் அவ்வப்போது  ‘பளிச்’ என்று உண்மையைச் சொல்லிவிடுகின்றனர்.

 

மதுரையிலும்கூட, அமைச்சர் செல்லூர் ராஜு ஆதரவாளர் ஒருவர், ‘அஞ்சுவதும் அடிபணிவதும் ஒருவருக்கே!’ என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்ததாக, அவரை வரவேற்கும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த போஸ்டர் மூலம் சில உண்மைகளை, ஆளும்கட்சியினர் பகிரங்கமாக ஒத்துக்கொள்கின்றனர். அதாவது, ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையிலும், அவருக்கு அஞ்சியதையும், அடிபணிந்ததையும் பெருமிதத்தோடு சொல்கின்றனர். நேரடியாக கூற வருவது என்னவென்றால், ‘பிரதமர் மோடி போன்றவருக்கு ஒருக்காலும் அடிபணிய மாட்டோம். மும்மொழிக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம்.’ என்பதுதான்! மறைமுக அர்த்தம் ஒன்றும் இருப்பதாக சொல்கின்றனர். அது, ‘ஜெயலலிதாவுக்கு தந்த மரியாதையை, சசிகலாவுக்கெல்லாம் தரவே மாட்டோம்’ என உறுதிபடக் கூறுவதுதான்! 

 

முதல்வரை வரவேற்கும் மதுரை மாவட்டத்தின் இன்னொரு அமைச்சர் தரப்பிலோ, ‘தென் தமிழகத்தின் பாதுகாவலரே ஆர்.பி.உதயகுமார்தான்..’ என விளம்பரம் செய்துள்ளனர். அதாவது, ‘தமிழகத்தின் வடக்கு பகுதியை எடப்பாடி பழனிசாமி, அல்லது யார் வேண்டுமானாலும் சொந்தம் கொண்டாடட்டும். தமிழகத்தின் தென்பகுதி ஆர்.பி.உதயகுமாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.’ எனச் சொல்ல வருகின்றனர். ‘அப்படியென்றால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் காட்டிலுமா..?’ என்று கேட்டால், ‘ஆமா.. அப்படித்தான்!’ என்று சட்டென்று பதில் வருகிறது, உதயகுமார் விசிவாசி ஒருவரிடமிருந்து.  

 

சும்மா சொல்லக்கூடாது, சொல்லி அடிப்பதில் மதுரை அரசியல்வாதிகள்  படு கில்லிதான்!

 

 

சார்ந்த செய்திகள்