நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் 25ஆம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75வது ஆண்டு எட்டியதை குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் விவாதம் நடத்தப்பட இருக்கிறது. இந்த விவாதத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் இன்று (13-12-24) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, வயநாடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “நீதி , ஒற்றுமை மற்றும் கருத்து சுதந்திரத்தின் கவசமாக அரசியலமைப்பு சாசனம் இருக்கிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதை உடைக்க அரசு எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டு வருகிறது. அரசியலமைப்பு சட்ட, சமூகம் பொருளாதாரம் மற்றும் அரசியல் நீதியை தருகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வராமல் இருந்திருந்தால், அரசியல் சாசனத்தை மாற்றும் வேலையை அரசு செய்திருக்கும்.
இந்த நாட்டின் அரசியலமைப்பை, மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்பதை இந்த தேர்தலில் அறிந்துகொண்டதால், அரசியலமைப்பு சாசனத்தை பற்றி அவர்கள் திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில், கிட்டத்தட்ட தோல்வியை தழுவிய நிலையில், அரசியலமைப்பை சட்டத்தை மாற்றும் விவாதம் இந்த நாட்டில் எடுபடாது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இன்று, இந்த நாட்டு மக்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் அவசியமானது.
இதன் மூலம், அனைவரின் நிலையை அறிந்து அதற்கேற்ப திட்டத்தை உருவாக்க முடியும். ஒருவருடைய பெயரை திட்டமிட்டே சொல்ல தயங்குகிறார்கள். அவர் தான் ஹெச்.ஏ.எல், ஓ.என்.ஜி.சி, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தொடங்கி வைத்தார். அவருடைய பெயரை புத்தகத்தில் இருந்து அழிக்கலாம், பேச்சுகளில் இருந்து அழிக்கலாம். ஆனால், இந்த தேசத்தை கட்டியெழுப்பி அவர் ஆற்றிய பங்கை, இந்த தேசத்திலிருந்து ஒருபோதும் அழிக்க முடியாது” என்று ஆவேசமாக பேசினார்.